Monday, December 13, 2010

முதல்வர் பதவியை சாபமாக கருதும் கலைஞர்.!!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு கடந்த டிசம்பர் 11ம் தேதி தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன், துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் என்னும் விருது தரப்பட்டது. மேலும் அமைச்சர்கள் மைதீன் கான், தா.மோ.அன்பரசன், முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுசெயலாளர் முகமது அபுபக்கர், செயலாளர் காயல் மகபூப், பொருளாளர் வடக்கு கோட்டையார், கவிஞர் அப்துல் ரகுமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


மாநாட்டில் முஸ்லிம் லீக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சில பல வேண்டுகோளை முன் வைத்தனர். பள்ளிகளில் சிறுபான்மை பாடம், வெளிநாடு வாழும் மக்களுக்கு நல வாரியம், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடை அதிகரித்தல், தாம்பரம் சிறுவியாபாரிகளுக்கு மாற்று இடமளித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதை தொடர்ந்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் இலக்கு 2020 என்னும் நூலை வெளியிட்டு மத்திய ரயில்வே இணை மந்திரியான அகமது முதல்வர் கலைஞர் எல்லா சமுதாயத்துக்கும் பொதுவான தலைவர் என்று புகழாரம் சூட்டினார்.


விருது வழங்கும் முன் துணை முதல்வர் முக.க.ஸ்டாலின் பேசினார். அவர் கூறுகையில், '' தலைவர் இதுபோல் பல விருதுகளை பெற்றுள்ளார்.. இப்போது மூன்று சமூகத்துக்கும் பொதுவாக நமது தலைவருக்கு இவ்விருது வழங்கபட இருக்கிறது.. இவ்விருதை பெறுவதால் ஒன்றும் கலைஞர் சிறப்புற போவதில்லை.. அவர் இதுபோல் பல விருதுகளை பெற்றுள்ளார்.. தூக்குமேடை நாடகத்தில் அன்றே எம்.ஆர்.ராதா அவர்களால் நமது தலைவருக்கு கொடுத்த பட்டம கலைஞர் என்பது.. இன்னும் பல பல விருதுகளும் பட்டங்களும்... அதனால் நமது தலைவருக்கு கொடுப்பதாலே இப்பட்டம் சிறப்புறுகிறது'' என்றார்.

பின்னர் பேசிய முஸ்லிம் லீக் கட்சியின் தமிழக தலைவர் காஜர் மொய்தீன் கூறுகையில்,''அண்ணா அறிவாலய்த்திலிருந்து இக்கூட்டம் நடைபெறும் இடம் வரை திரளாக கூடியிருந்த மக்கள் கூட்டம் நமது கலைஞரை வரவேற்றதை நாம் காணலாம். கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் என்னும் விருதை தருவதாக பேசிய போது இது இவருக்கு தேவைதானா என்று சிலர் கேள்விகள் எழுப்பினர்.. அதன் பிறகே நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர் என்று தருவதாக முடிவு செய்தோம்...'' என்று கூறினார்.



பின்னர் கலைஞருக்கு நல்லிணக்க நாயகர் விருது வழங்கப்பட்டது. அதையடுத்து கலைஞர் நிறைவுபேருரை ஆற்றினார்.
''என்னை பற்றி புகழ்ந்து பேசிய காதர் மொய்தீன் நான் காய்தே மிலத்தின் வழி பின்பற்றுபவன் என்பதை சொல்லாமல் விட்டது மனக்குறைவாக போனது'' என்று சொன்னபோது மக்கள் கரகோஷம் எழுப்பினர்.

''நான் இதுபோன்ற விருதுகளை ஒன்றும் பெருமைகாகவோ, இல்லை பொருட்காட்சிகளிலோ வைக்கபோவதில்லை. எனக்காக தர நினைக்கும் மனங்களுக்காகவே இங்கு வந்திருக்கிறேன்.''

மேலும் சமச்சீர் கல்வியில் உருதுமொழிக்கான பாதுகாப்பை பற்றி
பேசுகையில், ''நமது மொழியான உருது மொழியை சிறப்பிக்க எந்த முயற்சியை வேண்டுமானாலும் எடுப்பேன்'' என்று அவர் நமது மொழி என்றபோது மக்கள் சந்தோசத்தில் கரகோஷம் எழுப்பினார்.

'' இன்று எங்கள் ஆட்சி, நாளை வேறொர ஆட்சி வரலாம்''என்று அவர் சொல்லும்போது கூட்டத்திலிருந்து எழுந்த சப்தங்கள் என்றுமே நீங்கள் தான் என ஒலிக்க மேலும் பேசலானார், '' அது உங்கள் ஆசை.. ஏற்கனவே 40 ஆண்டுகள் நான் தான் முதல்வர் என மாநாட்டு தலைவர் சாபம் கொடுத்துவிட்டார்.. என் மேல் அவருக்கு ஏன் இந்த அளவுக்கு கோபம் என்று தெரியவில்லை.. முதல்வர் பதவியில் இன்னும் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார் போல... இன்னும் எனக்கு இயற்கை எந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருகிறதோ அதுவரை என பாப்போம்.. சிலர் எங்கள் தலைகளில் குப்பை கொட்ட எண்ணுகிறார்கள்.. அப்படி நினைப்பவர்களின் மேல் நாங்கள் கோபம் கொள்வதோ இல்லை எரிச்சலடைவதோ என செயலபடமாட்டோம்.. எங்களின் மதிப்பை அவர்களுக்கு என்றுமே புரியவைப்போம்..''



மேலும் தொடர்ந்த அவர், “தாம்பர மேம்பாலம் விரிவாக்க பணியால் இடமிழந்த வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கும் கோரிக்கையை பரிசீலித்தது முடிவெடுக்கப்படும்.. பாதிக்கப்பட்டோரின் பட்டியல்கள் அளித்தால் கொஞ்சம் வசதியாக இருக்கும்.. முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படும் இடொதுக்கீடை பத்து சதவீதமாக மாற்ற கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்துள்ளனர்.. மாநில அரசுக்கு இல்லை மத்திய அரசுக்கு.. இதை மத்திய அரசு கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்.. அப்படி பத்து சதவீதம் கிடைக்குமேயானால் முதலில் சந்தோசிப்பது நாங்களாக தான் இருக்கும். இடையில் நாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கொண்டு ஆட்சியமைத்தபோது எங்களின் முதல் கோரிக்கையாக இருந்த போது மத உணர்வோ, பேதமோ இல்லாத அரசாக அமைக்கவேண்டும் என்று சொல்லியிருந்தோம்.. அது நடைபெற்ற வரையில் அவர்களோடு இணைந்திருந்தோம். எப்போது அவர்கள் மீண்டும் பாபர் மசூதி இடிப்பு, ஜாதி பேதம் என மீண்டும் ஆரம்பித்தார்களோ அன்றே நாங்கள் இனி எங்களுக்கு இங்கே வேலையில்லை என வெளியேறிவிட்டோம்.. அதுதான் திராவிட முன்னேற்ற கழகம். அன்று முதல் இன்றுவரை அந்த மதவாத சக்திக்கு இடம் தராமல் இருக்கிறோம். அதில் நாங்கள் கொண்ட உறுதியால் தான் இந்திய முஸ்லிம் லீக் நண்பர்கள் இன்று என்னுடன் அமர்ந்திருக்கின்றனர். இந்த அணி என்றுமே அப்படியே தான் இருக்கும்.. யார் சேர்ந்தாலும் பிரிந்தாலும் இந்த அணி மாறாது..'' என்று கூறி முடித்தார்.