Friday, September 18, 2009

ஸதக்கத்துல் ஃபித்ரை முறையாகக்
கொடுப்போம்
ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன?

ஈகைத் திருநாள் என்னும் ஈதுல் ஃபித்ரு அன்று ஏழை - எளியோருக்கு வழங்கியாகவேண்டிய கொடை ஸதக்கத்துல் பிஃத்ரு ஸகாதுல் ஃபித்ரு எனப்படு கின்றது. ரமழான் மாத நோன்புகளை வைத்து முடித்த பிறகு கொடுக்கப்படுவதால் இது ஸதக்கத்துல் ஃபித்ரு எனப்படுகின்றது. ரமழான் மாத நோன்புகளில் நாம் இழைத்துவிடும் சிறுசிறு குற்றங்களுக்கு பரிகாரமாக இது அமைகின்றது. ஏழை - எளிய முஸ்லிம்களும் ஈதுப் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். இல்லாமை அவர்களுடைய சந்தோஷத்திற்கு தடையாக ஆகிவிடக்கூடாது என்பதும் ஒரு முக்கியக் காரணம். (அபு தாவுது, இப்னு மாஜா)

யாரெல்லாம் கொடுக்கவேண்டும்?

முஸ்லிமான ஆண்கள், பெண்கள், சிறியவர்கள், பெரியவர்கள், பச்சிளம் குழந்தைகள், வயதானோர் அனைவரும் கட்டாயம் கொடுத்தாக வேண்டும். (புகாரி, முஸ்லிம், அபு தாவுது, நஸாயி, திர்மிதீ, அஹ்மத்)தான-தருமம் பெறத்தகுதியில்லாத அனைவரும் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடு;த்தாக வேண்டும். இவ்வளவு இருந்தால்தான் கொடுக்கவேண்டும் என்னும் நிபந்தனை எல்லாம் கிடையாது. ஒருநாளுக்கு அதிகமாகன உணவு வீட்டில் இருந்தால் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கவேண்டும். கடன் வாங்க முடிந்தால் கடன் வாங்கி ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்க வேண்டும்.

எப்போது கொடுக்கவேண்டும்?
ஈது தொழுகைக்காக தொழுகைத் திடலுக்கு போகும் முன் கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் கடமை நிறைவேறும். தொழுதபிறகு, கொடுத்தால் தான-தருமமாகக் கருதப்படுமே அல்லாமல் ஃபித்ரு கடமையை நிறைவேற்றியதாக ஆகாது.

எவற்றைக் கொடுக்கவேண்டும்?

நபிமொழிகளில் எட்டு பொருட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:-1) தீட்டாத கோதுமை
2) பேரீத்தம் பழம்
3) சோளம்
4) பாலாடைக் கட்டி
5) உலர்ந்த திராட்சை
6) வறுக்கப்பட்;ட தானியமாவு
7) கோதுமை மாவு
8) உணவுப் பொருள்இப்பொருட்களில் இருந்து ஏறக்குறைய 2650 கிராம் (இரண்டே முக்கால் கிலோ) அளவு கொடுக்கவேண்டும்.

நிர்ணயிப்பது சரியா?

ஸதக்கத்துல் ஃபித்ரு இவ்வளவுதான் என நிர்ணயிப்பது ஷரீஅத்தில் வழிகாட்டப் படவில்லை. நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கை முறையும் வசதிகளும் வேறுபடுகின்றன. நம்முடைய வசதி, வாய்ப்பு, செல்வ நிலைமை, வாழ்க்கை முறை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட பொருட்களில் நமக்குரிய, நம்மால் இயலுகின்ற பொருளின் அளவு ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்க வேண்டும். மேற்கண்ட பொருட்களில் உங்களால் கொடுக்க இயலுகின்ற பொருளின் அளவு ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கவேண்டும். மேற்கண்ட பொருட்களில் உங்களால் கொடுக்க இயலுகின்ற விலை உயர்ந்த பொருளைக் கொடுக்கவேண்டும் என இமாம் அபு ஹனீஃபா (ரஹ்) கூறியுள்ளார்கள்.இமாம்களைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்வோரும் நபிமொழிகளைப் பின்பற்றுவதாக சொல்வோரும் ஸதக்கத்துல் ஃபித்ராவுக்கென ஒரு தொகையை நிர்ணயித்து அறிவித்து விடுகிறார்கள். இரண்டு தரப்பாருக்கும் ஏறக்குறைய பத்து, பதினைந்து ரூபாய்தான் வித்தியாசம்.பொதுவாக, இரண்டரை கிலோ நடுத்தர கோதுமையின் விலையே நிர்ணயிக்கப் படுகின்றது. ஏறக்குறைய 60 அல்லது 80 ரூபாய். கூலிவேலைக்குப் போகின்ற முஸ்லிமும் 60 ரூபாய்தான் கொடுக்கிறார். மிகப்பெரிய பணக்காரரும் 60 ரூபாய்தான் கொடுக்கிறார். சாதாரண பருப்புக் குழம்போடு தம்முடைய உணவை முடித்துக் கொள்கின்ற ஏழை முஸ்லிம்களும் 60 ரூபாய் ஸதக்கத்துல் ஃபித்ரு கொடுக்கிறார்கள். அன்றாடம் நான்-வெஜ் சாப்பிடுகின்ற முஸ்லிம்களும் 60 ரூபாய் ஸதக்கத்துல் ஃபித்ருஸ கொடுக்கிறார்கள்.

இறைமறை குர்ஆனின்
வழிகாட்டுதல்

அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆன் இதற்கு வழிகாட்டுகின்றது. தன்னுடைய மனைவியை ஒருவர் தலாக் சொல்லிவிட்டால் தன்னால் முடிந்த அளவு உதவித்தொகையை வழங்கவேண்டும்.'ஆயினும், செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும் ஏழை அவனுக்குத் தக்க அளவும் அவர்களுக்குப் பயனுள்ள பொருட்களை முறையாகக் கொடுங்கள். இது நல்லோர்களின் கடமையாகும்' (அல்குர்ஆன் 2:236)தரத்திற்கும் தகுதிக்கும் ஏற்ப உதவித் தொகையை வழங்கவேண்டும் என குர்ஆன் சொல்கின்றது. தலாக் என்பது வெறுப்பு ஏற்பட்ட பிறகு, நடைபெறும் செயல். அப்போதுகூட முடிந்த அளவு உதவித்தொகையை அளிக்குமாறு குர்ஆன் சொல்கின்றது.ஸதக்கத்துல் ஃபித்ரு என்பதோ விருப்போடு செய்யும் செயல். குர்ஆன் சொல்லும் நியதியை கருத்தில் கொண்டால் இங்குதான் அதிகமாக சக்திக்கு ஏற்றவாறு கொடுத்தாக வேண்டும். ஆகையால் ஷரீஆ சொல்ல வருகின்ற கருத்தை மனதில் கொண்டு 50, 60 ரூபாயோடு நிறுத்திக் கொள்ளாமல் நம்முடைய தகுதிக்கு ஏற்ப தலைக்கு 100, 150, 200, 300, 500, 750, 1000, 1500, 2000 என மனப்பூர்வமாக வழங்குவோம். ஏழை முஸ்லிம்களும் நம்மோடு சந்தோஷமாக ஈது கொண்டாட வகை செய்வோம்.
தொகுப்பு: சையது அப்துல் ரஹ்மான் உமரி

Centre for Islamic Studies
Coimbatore. TN.