Monday, January 11, 2010

அமிலப் பெண்கள்
(இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )
போரிலும் பகையிலும் முதல் பொருளாய்அவளையே சூறையாடினாய்:அவளுக்கே துயரிழைத்தாய் ;உன்னால் அனாதைகளாக்கப் பட்டகுழந்தைகளையெல்லாம் அவளிடமே ஒப்படைத்தாய்:தலைவனாகவும் தேவனாகவும் நீதலை நிமிர்ந்து நடந்தாய்
(கவிஞர் ஃபஹீமாஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி' தொகுப்பிலிருந்து)
பல பத்திகளில் எழுத வேண்டியவற்றை, கவிஞரின் மேற்சொன்ன வரிகள் எளிதாகவும், விரிவாகவும், வெளிப்படையாகவும் விளக்குகிறது. போர்களிலும், பகைகளிலும், பல குடும்பங்களிலும் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஒவ்வொரு இடத்திலும் அவள் அத்திவாரமாக விளங்குவதாலோ என்னவோ, எதிரிகள் அவளையே சிதைக்கிறார்கள். எள்ளி நகையாடுகிறார்கள். காவலற்றுப் போன அகிம்சை விலங்கென, வேட்டையாடுகிறார்கள். எல்லாம் செய்யும் ஆண், தப்பித்துவிடுகிறான். சிலவேளை சிறிய தண்டனை அல்லது பொது மன்னிப்பு. பெண், காலங்காலமாக தன் வாழ்வின் இறுதிக் கணம் வரை ரணம் சுமக்க வேண்டியவளாகிறாள்.
இனி, படங்களைப் பார்ப்போம். இப் படங்கள் உங்களை அதிரச் செய்யும். இப்படியுமா கொடூரங்களென வியக்கவும் செய்யும். பாதிக்கப்பட்டவர்களுக்காக மனமுருகவும் செய்யும். அவர்களின் துயருணர்ந்து, இது போல எவருக்குமே நிகழக் கூடாதெனப் பிரார்த்தியுங்கள். நீங்கள் அறிந்தவர்கள் எவரேனும் இவ்வாறான கொடூரங்களை நிகழ்த்த முற்பட்டால், தடுங்கள். பாதிக்கப்படப் போவது ஒரு உயிர். ஒரு முழு மனித வாழ்க்கை.
இப் படங்களில் இருப்பவர்கள், வன்னமில (Acid) வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள். இச் சாகசத்தைச் செய்தவர்கள் ஆண்கள். பாகிஸ்தான் நாட்டில் இவை பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவரும் யுக்தி அல்லது பழிக்குப் பழி.
# இரம் சயீத் (வயது 30) - 12 வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால், நடு வீதியில் வைத்து, அமில வீச்சுக்கு உள்ளாகி முகம், தோள், பின்புறமென முழுவதுமாகப் பாதிக்கப்பட்டார். இவரைக் காப்பாற்ற, இருபத்தைந்து ப்ளாஸ்டிக் சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

# ஷமீம் அக்தர் (வயது 18) - இவரது 15 வயதில், மூவர் இவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திப் பின்னர் அமிலத்தை இவர் மீது எறிந்து தப்பித்தனர். இதுவரையில் பத்து ப்ளாஸ்டிக் சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.
# நஜாஃப் சுல்தானா (வயது 16) - பெண் குழந்தை வேண்டாமென்று கருதிய இவரது தந்தை, இவரது ஐந்து வயதில் இவரை எரித்துவிட்டார். இதன் காரணமாக முழுமையாகப் பார்வையிழந்த இவரை பெற்றோரும் கைவிட்டு விட, தற்பொழுது உறவினர்களிடம் தஞ்சமடைந்துள்ளார். பதினைந்து தடவைக்கும் மேலாக சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

# ஷெஹ்னாஸ் உஸ்மான் (வயது 36) - ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்பப் பிரச்சினையொன்றின் போது, இவரது உறவினரால் அமில வீச்சுக்குள்ளானார். நிவாரணம் பெறவேண்டி இதுவரை பத்து சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.

# ஷானாஸ் பீபி (வயது 35) - பத்து வருடங்களுக்கு முன்னர் குடும்பப் பிரச்சினையொன்றின் போது உறவினரொருவரால் அமில வீச்சுக்குள்ளான இவர் எந்தவொரு சிகிச்சைகளுக்கும் இன்றுவரை உட்படுத்தப்படவில்லை.

# கன்வால் கையூம் (வயது 26) - ஒரு வருடத்திற்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இவருக்கு இதுவரை எந்த சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை

# முனீரா ஆசிப் (வயது 23) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஏழு சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.


# புஷ்ரா ஷாரி (வயது 39) - தனக்குப் பிடிக்காத கணவரை விவாகரத்துச் செய்ய முற்பட்டபோது, அவரால் அமில வீச்சுக்காளான இவர், இதுவரை இருபத்தைந்து சத்திர சிகிச்சைகளுக்காளாகியுள்ளார்.

# மைமூனா கான் (வயது 21) - குடும்பத் தகராறொன்றின் போது ஒரு இளைஞர் குழுவினால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை இருபத்தியொரு சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.

# ஸைனப் பீபி (வயது 17) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை பல சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.


# நைலா ஃபர்ஹத் (வயது 19) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஏழு சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.

# ஸாய்ரா லியாகத் (வயது 26) - பதினைந்து வயதில் திருமணமான இவர், படிப்பைத் தொடர வேண்டுமென விரும்பியதால் தனது கணவராலேயே அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஒன்பது முறை சத்திர சிகிச்சைகளுக்காளாகியுள்ள இவர், கையில் வைத்திருப்பது பழைய புகைப்படம்.
இது போலவும், இன்னும் பல விதங்களில் பாதிக்கப்பட்ட பெண்களும் பாகிஸ்தானில் மட்டுமல்ல. எல்லா தேசங்களிலும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
போகப் பொருளாகவும், விளம்பரங்களுக்கும், அங்கங்களை வர்ணிக்கவும் பயன்படும் பெண்கள் மட்டுமல்ல. இவ்வாறாக பாதிப்புற்ற பெண்களும் நம் மத்தியில் உலவிக் கொண்டுதானிருக்கிறார்கள்.
எம்.ரிஷான் ஷெரீப்,இலங்கை