Sunday, November 21, 2010

தி.மு.க-காங். கூட்டணி உறுதியாக உள்ளது சென்னையில் வீரப்பமொய்லி


21 நவம்பர் 2010, 07:26.30 AM GMT +05:30 ]
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரால் கூட்டணியில் பாதிப்பு இல்லை தி.மு.க-காங். கூட்டணி உறுதியாக உள்ளது என்று வீரப்பமொய்லி தெரிவித்துள்ளார்.
மத்திய சட்ட மந்திரியும் காங்கிரஸ் மேலிட பார்வையாளருமான வீரப்ப மொய்லி இன்று காலை பெங்களூரில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி: ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்து இருப்பதால் பிரதமரின் கவுரவம் பாதிக்குமா?

பதில்:- இதனால் பிரதமரின் கவுரவத்துக்கு சிறிதளவும் பாதிப்பு ஏற்படாது. இந்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசுவதற்கும், விவாதம் நடத்துவதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சிகள் தயாராக இல்லாமல் கடந்த ஒரு வாரமாக பாராளுமன்றத்தை நடத்த விடாமல் முட்டுக்கட்டை போடுகின்றனர். இது ஜனநாயக விரோதமான செயல். பாராளுமன்றத்தில் கூச்சல்- குழப்பம் ஏற்படுத்துவது சரியான நடவடிக்கை அல்ல.

கே:- ஸ்பெக்ட்ரம் பிரச்சினை பாராளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு மத்திய அரசு தயங்குவது ஏன்?

ப:- இதில் மத்திய அரசுக்கு எந்த தயக்கமும் கிடையாது. கூட்டு குழுவை விட சர்வ அதிகாரமும் படைத்தது பாராளுமன்றம்தான். இந்த பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் விவாதித்தால்தான் முழு உண்மையும் தெரிய வரும். இதைத்தான் மத்திய அரசும் விரும்புகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் சர்வ அதிகாரம் படைத்த பாராளுமன்றத்தில் விவாதிப்பதை விட அதில் ஒரு அங்கமான கூட்டுக்குழு விசாரணை கேட்பது ஜனநாயக விதி முறைகளுக்கு முரணானது.

கே:-ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளாரே?

ப:- ஆம் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கே:- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி எந்த நிலையில் உள்ளது.

ப:- தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகவும் வலுவாகவும் உள்ளது. அது தொடரும் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.