வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா ! ! !
அஸஸ்லாமு அலைக்கும் (வரஹ்)அன்புள்ள சமுதாய இயக்க தொண்டர்களுக்கு....
சிறைவாசிகளின் விடுதலையை எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்பங்களுக்கு ஏமாற்றத்திற்கு மேல் ஏமாற்றமே மிஞ்சியது.
சமுதாய அமைப்புகள் சிறைவாசிகளின் விடுதலை எனும் கோரிக்கையை தொடர்ந்து மூன்றாண்டுகளாக தொய்வின்றி தொடுத்துக் கொண்டுள்ள போதிலும் செவிடன் காதில் உதிய சங்காக அரசு சமுதாய அமைப்புகளை அலட்சியப் படுத்திக் கொண்டுள்ளது. சுதந்திரம் வேண்டுமெனக் கூறியவர்களை சிறையில் அடைத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் போல, விடுதலையா கேட்கிறீர்கள்? வைக்கிறேன் வேட்டு என சிறைவாசிகளை வெகு தொலைவில் உள்ள சிறை களுக்கு, சிறை மாற்றம் செய்து கொண்டுள்ளது நம் தமிழக அரசு.
நொந்து நூலாகிப் போன சிறைபட்டோரின் குடும்பத்தினரோடு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போன்ற இக்கொடூர செயலை செய்பவர்களின் உள்ளம் எத்துனை கொடூரமானது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
நமக்கு ஏன் இந்நிலைமை? என்பதனை முஸ்லிம் உம்மாவும் அதன் நலனுக்காக செயல்படுகின்ற அமைப்புகளும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். சமுதாய அமைப்பு களின் தலைமைகளை மதிப்பதில்லை நம் அரசு. மக்களை திரட்டி வைக்கின்ற கோரிக்கைகளுக்கும் செவி சாய்ப்பதில்லை.
சிறைவாசிகளின் விடுதலை நிச்சயம் உண்டு ஒருக்காலும் சிறைமாற்றம் நிகழாது என அரசும் உளவுத்துறையும் அளிக்கின்ற போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து கொண்டுள்ளோம். இதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் அல்லவா?
கண்ணியமும் மானமும் நம் உயிரோடு கலந்துவிட்ட விஷயமல்லவா? அவை இல்லை எனில்a இழிவான வாழ்வை வாழ்ந்துதான் என்ன பயன்?
கண்ணியத்துடனும் மானத்துடனும் வாழ்ந்திடத்தானே திருக்குர்ஆனும் நபிமொழியும் நமக்கு அறிவுறுத்துகின்றன? அதை அப்படியே ஏற்றுக்கொண்டால் கண்ணியமும் மேன்மையும் நம்மை தேடி வருமல்லவா?
முஸ்லிம் உம்மாவும் அதன் நலன்களை அடிப்டையாகக் கொண்டு செயல்படும் அமைப்புகளும் ஒரு விஷயத்தை உணர்ந்து கொள்ளவேண்டும்.
நாம் அனைவரும் முஸ்லிம்கள். தமுமுக, தவ்ஹீத் ஜமாத், பாப்புலர் பிரண்டஆஃப் இந்தியா, முஸ்லிம் லீக், ஜமாஅத்தே இஸ்லாமி ,இந்திய தவ்ஹித் ஜமாத், என்பதெல்லாம் நமக்கு நாமே சூட்டிக் கொண்டுள்ள பெயர்கள், அடையாளங்கள்.
முஸ்லிம் என்னும் முதன்மை அடையாளத்தை பின்னுக்கு தள்ளுவதுதான் பிரிவுக்கும் இன்னபிற இழிவுக்கும் உண்மையான காரணம்.
ஒரு முஸ்லிம் துன்பத்திற்கு உள்ளானால் மற்ற மற்ற முஸ்லிம் துயரை துடைத்திட முன்வர வேண்டும். இதுதான் இஸ்லாம் நமக்கு கற்பிக்கும் பாடம்.
தமுமுக உறுப்பினருக்கு பாதிப்பு எனில், தவ்ஹீதில் உள்ளவர் நமக்கு என்ன வந்தது? நமக்கு எதற்கு வம்பு? என விட்டுவிட்டால் அவமானத்தை நமது ஆடையாக அணிந்து கொள்ள வேண்டியதுதான்.
இத்தகைய பிரிவுகளைத் தான் ஆளும் அரசும் விரும்புகின்றது. அவர்களின் சூழ்ச்சி இல்லாமலேயே நாம் பிரிந்து கிடப்பதுதான் நம்முடைய துரதிருஷ்டம்.
இந்நிலையின் காரணமாகத்தான் நாம் சமூக அரங்கில் மதிப்பிழந்து கிடக்கிறோம்.
என்று நாம் துன்பப்படுபவன் முஸ்லிம், துயருறுபவன் முஸ்லிம், அநீதிக்கு ஆளாபவன் முஸ்லிம், ஆபத்திற்கு உட்படுபவன் முஸ்லிம் என்னும் சொற் பிரயோகத்தில் ஆரம்பித்து அதற்கு செயல் வடிவம் தருகின்றோமோ, அன்றுதான் நமக்கு விடிவு காலம் பிறக்கும்.
மானிட சமுதாயத்தில் அநீதிக்கு ஆளாபவன் யாராக இருந்தாலும் அவனுக்காக குரல் கொடுத்து அநீதியை கண்டித்திட வேண்டிய தார்மீக பொறுப்பு ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உண்டு என்கின்றபோது, ஆண்டாண்டு காலமாக, அள்ளலுறும் சிறைவாசிகளுடைய விடுதலை மறுப்பிற்கும் கொடூர சிறை மாற்றத்திற்கும் எதிராக வித்தியாசங்கள் காட்டாமல் நாம் ஒன்றிணைவோம்.
நம் குரல்கள் அநீதிக்கெதிராக முழங்கட்டும். நம் கரங்கள் அநீதிக்கெதிராக உயரட்டும். அதன் அடிப்படையில் சிறைமாற்றம் செய்த முஸ்லிம் சிறைவாசி முஹம்மது அன்சாரியை மீண்டும் கோயமுத்தூர் சிறைக்கே மாற்றம் செய்திடும்வரை தொய்வின்றி நம் போராட்டங்கள் தொடர அனைவரும் இயன்ற ஒத்துழைப்பை நல்குவீர்களாக.
இவண்,
இஸ்லலாமிய ஊழியன்
கோவை தங்கப்பா