இஸ்லாமிய சமுதாயத்திற்கு திமுக அரசு வழங்கியுள்ள சலுகை
முதல்வர் கருணாநிதி அறிக்கை
சென்னை: சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு ஆற்ற வேண்டியது நிறைய இருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்லாமிய சமுதாயத்தினரோடு, நமது திராவிட இயக்கமும், நானும் கொண்டுள்ள தொய்வில்லாத தொடர்பும், உறவும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல. 70 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி மாணவனாக இருந்த போதே, திருவாரூரில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டிலேயே நான் பச்சைப் பிறைக் கொடியை கையிலே ஏந்துகின்ற சிறுவனாக கலந்து கொண்டேன். இஸ்லாமிய சமுதாயத்தினர்மீது நான் கொண்டிருந்த மதிப்பின் தொடர்ச்சியாக; காயிதே மில்லத் மீது நான் கொண்டிருந்த அன்புக்கும், பாசத்துக்கும் அடையாளமாக அந்த சமுதாயத்தினருக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பல்வேறு நன்மைகளை வழங்கியிருக்கிறேன். 1969ல் மீலாது நபிக்கு அரசு விடுமுறை அறிவிப்பு, அதிமுக அரசு 2001ல் ரத்து செய்த மீலாது நபி அரசு விடுமுறையை 15.11.2006 ஆணை மூலம் மீண்டும் அறிவித்தது; 1973ல் உருதுபேசும் லப்பைகள், தெக்கனி முஸ்லிம்கள் ஆகியோரைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது; 1974ல் சென்னை அரசினர் மகளிர் கல்லூரிக்கு Òகாயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரிÓ எனப் பெயர் சூட்டியது; 1989ல் Òசிறுபான்மையினர் நல ஆணையம்Ó ஒன்றை 13.2.1989 அன்று உருவாக்கியது. 1999ல் வக்பு வாரியச் சொத்துக்களைப் பராமரிப்பதற்கென முதன்முறையாக ரூ.40 லட்சம் வழங்கியது; 1999ல் Òதமிழ்நாடு சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழகம்Ó உருவாக்கியது; 2000ல் உலமா ஓய்வூதியத் திட்டத்தை 19.7.2000 முதல் தர்க்காக்களில் பணிபுரியும் முஜாவர்களுக்கும் நீட்டிப்பு செய்தது; 21.7.2000ல் Òஉருது அகடமிÓயைத் தொடங்கியது;காயிதே மில்லத் மணிமண்டபத்தை சென்னையில் அமைத்திட 25.2.2001 அன்று அடிக்கல் நாட்டி, திறக்கப்பட ஆவன செய்தது; சென்னைப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய ஆய்வு மையம் ஏற்படுத்தியது, உலமா மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தை 2009, மார்ச்சில் ஏற்படுத்தியது என இஸ்லாமிய சமுதாயத்திற்கு திமுக அரசு வழங்கியுள்ள சலுகைகளும், நன்மைகளும் கணக்கிலடங் காதவை. 2001&2006 அதிமுக ஆட்சியில் முதலில் 6 மாதகாலம் முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதியாக அன்வர்ராஜா இடம்பெற்றிருந்தார். அதற்குப்பிறகு முஸ்லிம் பிரதிநிதியே இல்லாமல்தான் அதிமுக அமைச்சரவை நடைபெற்றது. தற்பொழுது, 2006ல் பொறுப்பேற்ற திமுக ஆட்சியில் உபயதுல்லா, மைதீன்கான் என 2 முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். முஸ்லிம் சமுதாயத்தினருக்குப் பிரதிநிதித்துவம் இல்லாத திமுக அமைச்சரவையே இதுவரை இருந்ததில்லை என்ற உண்மையை அந்த சமுதாயத்தினர் நன்கறிவார்கள். முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வந்தது. அதனை ஏற்று, 2006&2007ம் ஆண்டுக்கான திமுக அரசின் நிதிநிலை அறிக்கையில், இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டுக்கான உறுதி வழங்கப்பட்டது. இதற்காக, நீதிபதி ஜனார்த்தனனை தலைவராகக் கொண்டுள்ள, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் பரிந்துரை கேட்கப்பட்டது. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று அந்த ஆணையம் பரிந்துரை செய்தது. தமிழக அரசு இந்தப் பரிந்துரையை ஏற்று, அண்ணாவின் 99ம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக, பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கி, 15.9.2007 அன்று அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இப்படி தனி இடஒதுக்கீடு வழங்கியதன் காரணமாக, கல்வி நிலையங்களில் அவர்கள் பெற்றுள்ள இடங்களின் எண்ணிக்கை பெருமளவுக்கு அதிகரித்துள்ளன. எம்.பி.பி.எஸ். படிப்பில், இஸ்லாமியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன், 2006&2007ம் ஆண்டில் 46, 2007&2008ல் 57 இடங்கள் கிடைத்தன. ஆனால், அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பிறகு 2008&2009ம் ஆண்டில் 78, 2009&2010ல் 80 இடங்கள் கிடைத்துள்ளன. அதாவது, தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்பு பெற்றதைவிட 74 சதவீத அதிகமான இடங்களை பெற்றிருக்கிறார்கள். பி.இ., படிப்பில் 2007&2008ம் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 2125. தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்குப் பிறகு 2008&2009ம் ஆண்டில் 3288, 2009&2010ல் 3655 இடங்கள் கிடைத்துள்ளன. அதாவது, பொறியியல் படிப்பில் தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு முன்பு பெற்றதைவிட 72 சதவீத அதிகமான இடங்களை இப்போது பெற்றிருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்குக் திமுக அரசு வழங்கிய தனி இடஒதுக்கீட்டின் காரணமாக இப்பொழுது அவர்கள் பெற்றுள்ள வெற்றி, எதிர்காலத்தில் அவர்கள் பெறவேண்டிய பல வெற்றிகளுக்கு அடிப்படையாக அமைந்திட வேண்டுமென்பதே எனது ஆசை. சிறுபான்மையினர் என்பதால் இஸ்லாமியர்களிடம் நாம் கொண்டிருக்கும் அக்கறையின் காரணமாக, அவர்களுக்கு பல்வேறு நன்மைகளைச் செய்திருந்தாலும்; இப்போதும் நான் சொல்லுகின்றேன் & எல்லாவற்றையும் நாம் செய்து முடித்துவிடவில்லை; அவர்களது மேம்பாட்டுக்கு நாம் ஆற்றிட வேண்டியது இன்னும் நிறைய இருக்கின்றது. நம்மைப் பொறுத்தவரையில், சமூக நீதிக்கான பயணம் என்பது, நீதிக்கட்சி காலத்திலேயே தொடங்கிய நெடிய பயணமல்லவா! இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.