Thursday, February 26, 2009

கோவை சிறைவாசிகளின் தற்போது நிலைகளை பற்றி ஒரு குறுந்தகடு வெளியீடு



அஸ்ஸலாமு அலைக்கும்,(வரஹ்)
கடந்த 11 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சொல்லொண்ணா துன்ப துயரங்களுடன் இருந்து வருகிறார்கள் என்பதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
சிறை சென்ற யாவரும் தங்களின் சுயநலன்களுக்காக சிறை சென்றிடவில்லை. சமூகத்தின் நலன் கருதியும், சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியும் தங்களை தத்தம் செய்தார்கள். தங்களின் வாழ்வை துச்சமாக மதித்து சமூக நலனே பெரிதென கருதி சிறை பட்டவர்களின் நிலை? . . . வார்த்தைகளால் சொல்லிட முடியாது.
பத்துக்குப் பத்து அறைகளில் முடங்கி, கடும் துன்ப துயரங்களை அனுபவித்து வரும் நிலை ஒரு புறமும், குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய ஆண்மக்களெல்லாம் சிறையில் அடைபட்டதால் - அக்குடும்பங்கள் அடைந்து வரும் வேதனைகள், வறுமைகள் என மறுபுறமும், ஒரு சேர ஒன்றாக அழுத்த சிறைவாசிகள் நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றன.
2008 செப்டம்பர் 15ல் அண்ணா பிறந்த நாளில் தமிழக அரசு 1405 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்தது. இதில் ஒரு முஸ்லிமைச் கூட விடுவிக்கவில்லை. இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் இயக்கங்கள் கோரிக்கைகளும், தீர்மானங்களும், தங்களின் கூட்டங்களில் நிறைவேற்றி வந்தன.
இத்தீர்மானங்களும், கோரிக்கைகளும் நிறைவேற்றினால் மட்டும், அது போதுமானதாக இல்லை என்பதை நாம் கடந்த காலங்களில் உணர்ந்தே உள்ளோம். ஏனெனில் இக்கோரிக்கைகளையும், தீர்மானங்களையும் அரசு செவியேற்று முஸ்லிம்களை கடந்த அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்ய முன்வந்திருக்க வேண்டும். அப்படி அரசு முன் வராததினால் முஸ்லிம் அமைப்புகளும், ஜமாஅத்துகளும், சிறைபட்டவர்களுக்கென ஒற்றை கோரிக்கை ஒன்றை ஏற்படுத்தி, கூட்டுப் போராட்டத்தை அறிவித்து அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தினால் மட்டுமே சிறைவாசிகளின் விடுதலை, இன்ஷா அல்லாஹ் சாத்தியப்படும்.
விடுதலை முயற்சி மேலே கூறிய பிரகாரம் ஒரு வகையிலும், இன்னொரு வகையோ சட்ட ரீதியாக இவர்களுடைய வழக்கை எதிர் கொள்வதே ஆகும். தற்போது கோவை குண்டு வெடிப்பு வழக்கு உயர்நீதி மன்றத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் விசாரணைக்கு வரவிருக்கின்றது. இதை எதிர்கொள்வதற்கு சட்டத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டியிருப்பதால் சுமார் ரூ. 75 லட்சம் வரை இவ்வறக்கட்டளைக்குத் தேவைப்படுகின்றது. சமுதாயத்திலுள்ள நல் உள்ளங்கள் இதற்காக உதவி செய்திட வேண்டும். 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இஸ்லாமிய விரோதிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் ஸஹாபா பெருமக்களையும் பெருமானார் குடும்பத்தையும் 'சூரே அபுதாலிப்' பள்ளத்தாக்கில் சமூக பஹிஷ்காரம் செய்தார்கள். மூன்றாண்டு காலம் உண்ண உணவின்றி இவர்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் வார்த்தைகளில் வடித்திட முடியாது. அந்நிகழ்வு வரலாற்றில் வைர வரிகளாக மின்னிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அடைந்து வந்த சொல்லொண்ணா துன்ப-துயரங்களை கண்டு எவர்கள் இவர்களை சமூக பஹிஷ்காரம் செய்தார்களோ அவர்களிலிருந்து சில நல்ல உள்ளங்கள் இப்பாதிக்கப்பட்டவர்களுக்கு தடையை மீறி உதவிட முன் வந்தார்கள்;. உதவிட முன் வந்ததின் காரணமாக சமூக பஹிஷ்காரம் என்னும் பெருங்கொடுமை முற்றுப் பெற காரணமாக அமைந்தது.
ஆகவே, நாங்கள் இறைவனிடம் இறைஞ்சுகிறோம், யா அல்லாஹ்‚ 11 ஆண்டுகளாக தங்களின் இளமை, தங்களின் பொருளை, தங்களின் குடும்பத்தை, தங்களின் குழந்தைகளை, தங்களின் மனைவிமார்களை இழந்து, பிரிந்து தவிக்கும் இவர்களை மீட்டிட முஸ்லிம் சமுதாயத்தினர் முன்வந்திட வேண்டும். சூரே அபுதாலிப் பள்ளத்தாக்கில் சமூக பஹிஷ்காரம் உடைந்தது போல் இவர்களின் விடுதலையும் நடந்திடவேண்டும்.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகவும், மறுமை நலனுக்காக வேண்டியும், சிறை பட்டவர்களின் விடுதலைக்காக முன்வந்திடுவீர்கள் என்கின்ற நம்பிக்கையில் இம்மடலை தங்களுக்கு அனுப்பியுள்ளோம்.
சிறைப்பட்டோரின் விபரங்கள் அடங்கிய குறுந்தகடையும் வெளியிட்டுள்ளம்.- வஸ்ஸலாம் -

இவண்
சிறுபான்மை உதவி அறக்கட்டளை
கோவை